தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, 2011ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மதுரை - தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர், கடந்த 2014 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.
அவர் தன் மனுவில், 'ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் 35 ஏக்கர் நிலமும், அதே போல திருத்தங்கல் பகுதியில் 2 வீட்டுமனைகள், மற்றும் 75 சென்ட் நிலமும் வாங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதன் அசல் சந்தை மதிப்பு 7 கோடி ரூபாய் என கணக்கிடப்படும் நிலையில், தான் அந்த நிலங்களை வெறும் 1 கோடியே 15 லட்சத்துக்கு வாங்கியுள்ளதாக ராஜேந்திர பாலாஜி கணக்குக் காட்டியுள்ளதாகவும், 7 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாகச் சொத்து சேர்த்துள்ள ராஜேந்திர பாலாஜி மீது, லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை' எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.