- உச்ச நீதிமன்ற கொலீஜியம் குழு, கடந்த 14ஆம் தேதி ஒடிசா, தெலங்கானா, சென்னை, ஜம்மு-காஷ்மீர், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கான உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் குறித்து ஆலோசனை நடத்தி, மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜியை கொலீஜியம் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. தற்போது சஞ்ஜிப் பானர்ஜி கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணிபுரிந்து வருகிறார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் ஏ.பி.சாஹி வரும் 31ஆம் தேதி ஓய்வு பெறவுள்ள நிலையில், இந்த பரிந்துரையை கொலீஜியம் குழு மத்திய அரசுக்கு மேற்கொண்டுள்ளது. அதேபோல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வரும் வினித் கோத்தாரியை, குஜராத் மாநில உயர் நீதிமன்றத்திற்கு மாற்றவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சஞ்ஜிப் பானர்ஜி சுய விவரக் குறிப்பு:
- சஞ்ஜிப் பானர்ஜி, கடந்த 1961 நவம்பர் 2ஆம் தேதி சஞ்ஜிப் பானர்ஜி பிறந்தார்.
- பொருளாதாரம் மற்றும் பி.எஸ்சி படிப்பில் 1983ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றார்.
- 1986-87ல் எல்.எல்.பி சட்டப்படிப்பை முடித்தார். சட்டம் மற்றும் பட்டப்படிப்பை கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முடித்தார்.
- 1990 நவம்பர் 21ல் வழக்கறிஞராக தன்னைப் பதிவு செய்து கொண்டார்.
- பின்னர் வழக்கறிஞராக உச்ச நீதிமன்றம், கொல்கத்தா உயர் நீதிமன்றம், டெல்லி, மும்பை, அலகாபாத், பாட்னா, ஜார்க்கண்ட், கவுகாத்தி, ஒடிசா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், பஞ்சாப்-ஹரியனா நீதிமன்றங்களில் வழக்குகளில் திறம்பட வாதம் செய்தார்.
- நீதிமன்றங்கள் தவிர்த்து டெல்லி நிறுவன சட்ட வாரியம், பத்திரங்கள் மேல்முறையீடு தீர்ப்பாயம், கடன் மீட்பு தீர்ப்பாயம் மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களிலும் தனது வாதத் திறமையால், தன்னை மெருகேற்றிக் கொண்டார்.
- முக்கியமாக கார்ப்பரேட் மற்றும் அறிவுசார் சொத்துச் சட்ட வழக்குகளில் அதிக கவனம் செலுத்தினார்.
- கடந்த 2006ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், உச்ச நீதிமன்ற கொலீஜியத்தால் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள ஏ.பி.சாஹி வரும் டிசம்பர் 31ஆம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில், உச்ச நீதிமன்ற கொலீஜியம் புதிய தலைமை நீதிபதிக்கான பரிந்துரை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.