கள்ளக்குறிச்சி (தனி) தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் பிரபுவும், தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவரின் மகள் சௌந்தர்யாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திருச்செங்கோடு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் சௌந்தர்யாவின் காதலை பெற்றோர் ஏற்காத நிலையில், அக்டோபர் 1 ஆம் தேதி திடீரென அவர் மாயமாகியுள்ளார்.
இந்நிலையில் அக்டோபர் 5ஆம் தேதி, சௌந்தர்யாவை திருமணம் செய்த புகைப்படத்தையும், இத்திருமணத்திற்கு மறுத்ததால் வீட்டை விட்டு வெளியேறி தன்னை முழுமனதுடன் சௌந்தர்யா திருமணம் செய்துகொண்டதாக காட்சிப்பதிவையும் பிரபு வெளியிட்டார்.
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பிரபுவும், அவரது தந்தையும் சேர்ந்துதான் தன் மகளை கடத்தியிருப்பதாகவும், அவர்களிடமிருந்து மகளை மீட்டு, கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுவாமிநாதன், தியாகதுருகம் காவல் நிலையத்தில் சௌந்தர்யாவின் தந்தை புகார் அளித்துள்ளார். ஆனால், புகாரை வாங்க காவல் துறையினர் மறுத்துள்ளனர்.