சென்னை: கரோனா காலகட்டத்தில் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அங்கு நடைபெற்ற பாதுகாப்பு நடைமுறைகளையும், முன்னெச்சரிக்கை நடைமுறைகளை மேற்கொள்வது குறித்தும் பிகார் மாநில சுகாதாரத்துறை அலுவலர்கள் சுதீர் குமார், ரோகினி ஆகியோர் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருடன் இன்று (மார்ச் 17) ஆலோசனை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு, 'தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்தபின்னர் தங்க, வெள்ளி நகைகள் 290 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதன் மதிப்பினை வருமானவரித்துறை தான் மதிப்பீடு செய்து கொடுக்கும்.
நத்தம் தொகுதி வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.
பிகாரில் கரோனா வைரஸ் தாக்கம் தினமும் 12 ஆயிரம் என இருந்தபோதே தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்பொழுது தினமும் 800 நபர்களுக்குத்தான் கரோனா பாதிப்பு இருந்து வருகிறது. கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தேர்தலை நிறுத்துவது குறித்து எந்தவிதமான தகவலையும் தேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லை.
கரோனா பரவலைத் தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் ஒரு சில வழிமுறைகளை வழங்கியுள்ளனர். அதற்கேற்றவாறு சுகாதாரத்துறை செயல்படும். இருந்தபோதிலும் தமிழ்நாடு அரசு தான் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.
தேர்தல் ஆணையம் கரோனா பரவலைத் தடுப்பதற்காக பரந்த இடங்களில் பரப்புரைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கரோனா பரவலைத் தடுப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு உள்ளாட்சித்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை , காவல் துறை ஆகியவை பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி ஏற்கெனவே நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
கரோனா பரவல் விதிமுறைகளை மீறியவர்கள் மீது அரசு தான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையம் தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த வேண்டும் எனக் கூறியவற்றையும், பிற விதிமுறைகளையும் பின்பற்றுகிறோம்.