சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா நான்கு ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு கடந்த ஜனவரி மாதம் விடுதலை ஆனார். சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக அவரால் மெரினாவிற்குச் செல்ல முடியவில்லை. மேலும், சசிகலா, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், தொடர்ந்து தொண்டர்களிடம் அவர் உரையாடும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவந்தது.
சிறைவாசத்திற்குப் பின் முதன்முதலாக
இந்நிலையில், சசிகலா நாளை மறுநாள் (அக். 16) மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்த இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தென் சென்னை மாவட்ட கழக முன்னாள்இணைச் செயலாளரான வைத்தியநாதன் சசிகலாவிற்கு காவல் துறை பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில், வருகிற 16ஆம் தேதி காலை 10 மணியளவில் அதிமுக பொதுச்செயலாளரான சசிகலா, ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா நினைவிடங்களுக்குச் செல்ல இருப்பதால் தகுந்த காவல் துறை பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் வருகிற 17ஆம் தேதி தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் இல்லத்திற்கு சசிகலா செல்ல உள்ளதால் தி. நகர் துணை ஆணையரிடம் பாதுகாப்பு கேட்டு மனு அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சசிகலா மீண்டும் அரசியல் பயணம்... சேலத்தில் சின்னம்மா பேரவைக் கூட்டம்... பரபரக்கும் அரசியல் களம்