சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்ற ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர்
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திலும், எம்ஜிஆர் நினைவிடத்திலும், பேரறிஞர் அண்ணா நினைவிடத்திலும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, செங்கோட்டையன், உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது, 'கட்சியின் சட்டத்திட்ட விதிப்படி தேர்தல் நடைபெற்று, போட்டியின்றி ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்றனர்.
'சசிகலாவின் முதலைக்கண்ணீர் நாடகம் எடுபடவில்லை '- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக தேர்தலில் பிரச்னைகளை குழப்பங்களை ஏற்படுத்தலாம் என்று இரவு பகல் தூங்காமல் இருந்தவர்களுக்கும், எதிரிகளுக்கும் இடம் கொடுக்காத வகையில் தேர்தல் சிறப்பாக நடைபெற்று முடிந்து விட்டது. தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் முதலைக் கண்ணீர் வடித்து நாடகம் ஆடிய சசிகலாவின் எண்ணம் ஈடேறவில்லை' எனத் தெரிவித்தார்.
மேலும் அதிமுகவின் உள்கட்சித் தேர்தலை சீர்குலைக்க எத்தனையோ தீய சக்திகள் முயற்சித்ததாகவும் அவற்றை முறியடித்து உள்ளதாகவும் நீதிமன்றங்களுக்கு வழக்குகள் சென்றால் அவற்றை சட்டப்படி சந்திப்போம் என்றும் கூறினார்.