தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 27, 2021, 8:53 PM IST

ETV Bharat / city

சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு: அவகாசம் கோரிய ஓபிஎஸ்

அதிமுக பொதுச்செயலாளராக இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் கோரப்பட்டது.

சசிகலா, ஓபிஎஸ், ஓ பன்னீர் செல்வம், sasikala, ops, eps, aiadmk, அதிமுக, city civil court, ops asks time, சென்னை உரிமையியல் நீதிமன்றம்
சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரனை பொதுச்செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனால், இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், தன்னை பொதுச்செயலாளராக அறிவித்து 2016 டிசம்பர் 29ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரை கட்டுப்படுத்தும் என அறிவிக்கக் கோரியும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

சசிகலாவின் வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களான பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் சென்னை நான்காவது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை எனவும், கட்சி உரிமை கோரிய வழக்கில் மதுசூதனன் தலைமையிலான அணியே அதிமுக என அறிவித்து தேர்தல் ஆணையமும், டெல்லி உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

கட்சியும், சின்னமும் தங்களிடம் தான் இருப்பதாகவும், தேர்தல் ஆணையமும் இதை உறுதி செய்துள்ளதாகவும் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தனித்தனியாக வாதிடப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபால், தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க காலஅவகாசம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை நவம்பர் 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளரான பன்னீர் செல்வம் மற்றும் கட்சியினரிடையே மோதல் கருத்து நிலவி வந்த நிலையில், சசிகலா வழக்கை எதிர்த்து அதிமுக தொடரப்பட்ட வழக்கிற்கு பதிலளிக்க பன்னீர்செல்வம் தரப்பில் நீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இதையும் படிங்க:அதிமுகவில் இணைகிறாரா சசிகலா? மதுரையில் ஓபிஎஸ் பேட்டி

ABOUT THE AUTHOR

...view details