அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெ. ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 2016ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி மரணம் அடைந்தார். அதன் பின்னர் அதிமுகவின் பொது செயலாளராக வி.கே சசிகலாவும், துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் அதிமுகவினரால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்த சமயத்தில், 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக வழக்கு
அந்த பொதுக்குழுவில் அதிமுக நிர்வாகிகளாக சசிகலா, தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அதிமுகவின் பொதுக்குழுக்கூட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
அதில், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா உள்ள நிலையில் கட்சி விரோதமான செயல்பாடுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களும் மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டியிருந்தனர்.
பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும், குறிப்பாக தங்களை கட்சியின் பொதுச்செயலாளர், துணைப்பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தனர். இந்த வழக்கில், வழக்கு கட்டணமாக 25 லட்ச ரூபாய் செலுத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி. கார்த்திகேயன், கட்சியின் வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களையும், கட்சி தொடர்பான அனைத்து ஆவணங்களையும், அதிமுக தலைமைக்கழக மேலாளர் மகாலிங்கம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.