மகாத்மா காந்தியின் 74ஆவது நினைவுநாளையொட்டி இன்று (ஜன. 30) சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள காந்தியின் திருவுருவச் சிலைக்கு கீழ் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்திக்கு அஞ்சலி பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. எழுவரை விடுதலை செய்ய வேண்டும் என்றுதான் ஆளுநரிடம் வலியுறுத்திவருகிறோம்.
ஏழு பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்றைய தினம் ஆளுநரை நாங்கள் சந்தித்தோம். ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழ்நாட்டில் முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் சிறப்பான ஆட்சி நடக்கிறது. அதிமுக எஃகு கோட்டையாக உள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி மலரும்.
சசிகலாவும், அமமுக கட்சியும் அதிமுகவில் இணைவதற்கு 100 விழுக்காடு வாய்ப்பு இல்லை என்று முதலமைச்சர் பழனிசாமி ஏற்கனவே தெளிவுப்படுத்திவிட்டார். இதுதான் என்னுடைய நிலைப்பாடும்.
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன், சசிகலா நல்ல உடல்நலம் பெற்று அறம்சார்ந்த பணியில் கவனம் செலுத்தி மன நிம்மதியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று மனிதாபிமானம் அடிப்படையில்தான் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மற்ற கட்சிகளைவிட, அதிமுக தலைமையிலான மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவித்த பிறகு ஒருசில கட்சியினர் அதிமுக கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பு உள்ளது" எனத் தெரிவித்தார்.
தேமுதிக 41 தொகுதி, அதிமுகவிடம் கேட்கிறார்கள் என்ற கேள்விக்கு, யாருக்கு எந்தத் தொகுதி என்று உரிய நேரத்தில் கட்சியின் தலைமை அறிவிக்கும் என்று சொன்ன அவர், கூட்டணி என்பது வேறு; கொள்கை என்பது வேறு என்றார்.
மேலும், 'வன்னியர்கள் உள் ஒதுக்கீடு குறித்து பாமக வலியுறுத்திவருகின்றனர். இதனால் பாமக - அதிமுக கூட்டணியில் எந்தச் சலசலப்பும் இல்லை' என்றும் தனது பேட்டியில் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.