தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

"தோசா கிங்" வீழ்ந்த கதை - மரணம் வரை துரத்திய கொலை வழக்கு

சென்னை: ஆயுள் தண்டனை பெற்று நீதிமன்ற அனுமதியுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் இன்று காலமானார். அவரது மரணம் வரை தொடர்ந்த வழக்கு குறித்து சிறு தொகுப்பு.

Saravana bhavan Rajagopal

By

Published : Jul 18, 2019, 1:42 PM IST

Updated : Jul 18, 2019, 2:41 PM IST

தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வரும் சரவண பவன் உணவகத்தின் உரிமையாளர் ராஜகோபால். தனது இளமைக்காலத்தில் உணவகங்களில் மேசை துடைத்தும், பல்வேறு இன்னல்களை சந்தித்தும் வந்த அவர் தனது கடின உழைப்பால் முன்னேறி சரவண பவன் என்ற உணவகத்தை ஆரம்பித்து உலகெங்கும் கிளை பரப்பினார்.

சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால்

பின்னாளில், அவரது உணவகத்தில் துணை மேலாளராக பணியாற்றிய ராமசாமியின் மகள் ஜீவஜோதியை மணந்துகொண்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம் என்று ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார். இதை நம்பிய ராஜகோபால், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஜீவஜோதியை வற்புறுத்தினார். ஆனால், அதற்கு உடன்பட மறுத்த ஜீவஜோதி தனது காதலரான பிரின்ஸ் சாந்தகுமாரைத் திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னும் அவரைத் துரத்திய ராஜகோபால் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி ஜீவஜோதியை தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.

ஜீவஜோதி

இதற்கு அவர் உடன்படாததை அடுத்து, ஜீவஜோதியின் கணவரான பிரின்ஸ் சாந்தகுமாருக்கு பல்வேறு தொல்லைகள் கொடுத்து வந்தார். அப்படியும் தனக்கு அடிபணியாமல் இருந்த பிரின்ஸ் சாந்தகுமாரை 2001ஆம் ஆண்டு கொடக்கானலுக்கு கடத்திச்சென்று சித்ரவதை செய்து திரைப்பட பாணியில் கொடூரமாகக் கொலை செய்தார்.

இதன் பின்பு ஜீவஜோதி அளித்த புகாரின் அடிப்படையில் நடைபெற்று வந்த கொலை வழக்கில் 2004ஆம் ஆண்டு ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சென்னை பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் கொலைக்கு உதவிய காசி விஸ்வநாதன், டேனியல், தமிழ்செல்வன், முருகானந்தம், ஜாகீர் உசேன் உள்ளிட்டோருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ராஜகோபால். ஆனால் வழக்கில் 2009ஆம் ஆண்டு தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் சிறைத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உயர்த்தி அறிவித்தது.

இந்தத் தீர்ப்பையும் எதிர்த்து ராஜகோபால் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் நடப்பாண்டு மார்ச் 29ஆம் தேதி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. மேலும் ஜூலை 7ஆம் தேதிக்குள் சரணடையுமாறு ராஜகோபால் உள்ளிட்டோருக்கு கால அவகாசம் வழங்கியது.

இந்த கால அவகாசம் முடிந்தபோது, காசி விஸ்வநாதன், டேனியல், தமிழ்செல்வன், ஜாகீர் உசேன் உள்ளிட்டோர் சென்னை நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினர். எனினும் ராஜகோபால் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி மேலும் கால அவகாசம் கோரினார்.

ஸ்ட்ரெச்சரில் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான ராஜகோபால்

இதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததையடுத்து, ராஜகோபால் ஜூலை 9ஆம் தேதி ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி வந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நீதிமன்றம் ராஜகோபாலை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

உடல்நலம் மிகவும் பாதிக்கப்படவே அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, உடல்நிலையைக் காரணம் காட்டி ராஜகோபாலின் மகன் தந்தையை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

ராஜகோபாலின் மருத்துவ அறிக்கையை பார்த்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்க்க அனுமதி வழங்கினர். இதைத் தொடர்ந்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜகோபாலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த ராஜகோபால் இன்று காலை சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

ராஜகோபால் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனை

ராஜகோபாலை மரணப் படுக்கை வரை துரத்திய வழக்கு அவரை அமைதியில்லாமல் வேதனையில் ஆழ்த்தியது. கடின உழைப்பால் வாழ்க்கையில் உச்சத்தைத் தொட்ட ராஜகோபால், ஜோதிடத்தை நம்பி வீழ்ந்த கதை அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது.

Last Updated : Jul 18, 2019, 2:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details