வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் சதீஷ்குமார் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்! - சதீஷ்குமார் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
சென்னை: பிரபல வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் சதீஷ்குமார் கொலை வழக்கில் 9 ஆண்டுகள் ஆகியும் குற்றவாளி யார் எனக் கண்டறியப்படாத நிலையில், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் சதீஷ்குமார் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்! MHC](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10552121-664-10552121-1612833963532.jpg)
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த பிரபல குற்றவியல் வழக்கறிஞர் சங்கரசுப்பு, காணாமல்போன தனது மகனும் சட்டக்கல்லூரி மாணவருமான சதீஷ்குமாரை மீட்டுத் தரக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆள்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல்செய்தார்.
இதற்கிடையில், அடையாளம் தெரியாத சடலம் ஒன்று ஐ.சி.எஃப். ஏரியில் கண்டெடுக்கப்பட்டது. அது காணாமல்போன சதீஷ்குமாரின் உடல் என உறுதிசெய்யப்பட்டது. உடற்கூராய்வு அறிக்கையில் தொண்டையிலிருந்த அறுபட்ட காயங்களால் ரத்தம் வெளியேறி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை முதலில் திருமங்கலம் காவல் துறையினர் விசாரித்துவந்த நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி சதீஷ் குமாரின் தந்தை சங்கரசுப்பு தொடர்ந்த வழக்கை ஏற்று வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
சிபிஐ வழக்கை விசாரித்து இது தற்கொலை என அறிக்கைத் தாக்கல்செய்த நிலையில், வழக்கை சிபிஐ சரியான முறையில் விசாரிக்கவில்லை எனவும், தற்கொலை என்ற ரீதியில் வழக்கை முடித்துவைக்க முயற்சிப்பதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவை அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 2017ஆம் ஆண்டு விசாரணை அறிக்கைத் தாக்கல்செய்த சிறப்புப் புலனாய்வுப் பிரிவு, சதீஷ் குமார் கொலைசெய்யப்பட்டுள்ளதாகவும் யார் குற்றவாளி என்பதைக் கண்டறிய முடியவில்லை எனத் தெரிவித்திருந்தது.
அதே நேரத்தில், வழக்கை உரிய முறையில் விசாரிக்கவில்லை எனக் கூறி தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்த ஆறு பேர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவும் சிபிஐ-யைச் சேர்ந்த 2 காவல் துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைசெய்திருந்தது.
சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் அறிக்கைக்கு தமிழ்நாடு காவல் துறையும், சிபிஐயும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததோடு, தங்களால் முடிந்த அளவுக்கு இந்த வழக்கை நேர்மையாக விசாரித்ததாகவும், தங்கள் மீது குற்றஞ்சாட்டுவதில் அர்த்தமில்லை எனவும், சிறப்புப் புலனாய்வுப் பிரிவுக்கு அந்த அதிகாரமும் இல்லை எனவும் தெரிவித்திருந்தன.
சிபிஐ தற்கொலை எனவும், சிறப்புப் புலனாய்வுப் பிரிவு இது கொலை எனவும் முடிவுக்கு வந்த நிலையில், நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஜி. ஜெயச்சந்திரன், என். சதீஷ்குமார் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில், ஆரம்பத்தில் இந்த வழக்கை உரிய முறையில் காவல் துறை விசாரிக்கவில்லை என்பதாலேயே சிபிஐக்கு மாற்றப்பட்டதாகவும், சிபிஐ இது தற்கொலை வழக்கு என முடிவுக்கு வந்துள்ளதால், மேற்கொண்டு இந்த வழக்கை அவர்களிடம் ஒப்படைத்தால் வழக்கில் முன்னேற்றம் ஏதும் இருக்காது எனவும், அதன் காரணமாக வழக்கு விசாரணையை சென்னை சிபிசிஐடி காவல் துறையினரிடம் ஒப்படைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ, சிறப்புப் புலனாய்வுப் பிரிவு விசாரணை அறிக்கைகள், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் எழும்பூர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள நீதிபதிகள், சென்னை சிபிசிஐடி காவல் துறையினர் கையிலெடுத்து வழக்கை உயிர்ப்புடன் வைத்திருக்குமாறும், ஆதாரங்கள் கிட்டினால் உரிய முறையில் விசாரித்து சட்டத்தின் முன் குற்றவாளியை நிலைநிறுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர்.
நான்கு மாதங்களுக்கு ஒருமுறை வழக்கின் முன்னேற்றம் குறித்து சிபிசிஐடி காவல் துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல்செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கறிஞர் சங்கரசுப்பு தொடர்ந்த ஆள்கொணர்வு மனுவை முடித்துவைத்தனர்.