சென்னை:தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில் நிலங்களை ஆக்கிரமித்து அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளதாக வெங்கட்ராமன் என்பவரும், சொகுசு பங்களாவும், நூற்பாலையும் கட்டப்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் என்பவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
அதில், குளம் தூர்வாருதல், கோவில் மண்டபம் புதுப்பித்தல் என்ற பெயரில் மணல் திருட்டு, நில ஆக்கிரமிப்பு, சட்டவிரோத கட்டுமானம் நடைபெறுவதாகவும், ஆக்கிரமிப்பாளர்கள் சில வருடங்களில் உரிமையாளர்களாக மாறிவிடுகிறார்கள் என்றும் தெரிவித்திருந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவில் நிலங்களை மீட்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிக்கப்பட்டு பெரிய கட்டுமானங்கள் கட்டப்பட்டது, மூன்றாவது நபர் நீதிமன்றத்திற்கு கொண்டுவந்த பிறகுதான் அறநிலையத்துறைக்கே தெரிய வருகிறது என வேதனை தெரிவித்தனர்.