சென்னை: வியாசர்பாடியைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடிவருகிறார். இவர் தனக்குத் தெரிந்தவரான விஜயகுமார் மூலமாக ரயில்வே துறையில் உதவியாளராக வேலை பார்ப்பதாகக் கூறிய புஷ்பராஜ் என்பருடன் அறிமுகமாகியுள்ளார்.
புஷ்பராஜ் தனக்கு ரயில்வே துறையில் செல்வாக்கு இருப்பதாகக் கூறி, தான் பணியாற்றிவருவதற்குச் சான்றாகத் தன்னுடைய ரயில்வே அடையாள அட்டை உள்ளிட்டவற்றை தினேஷிடம் காண்பித்து அவர்களை நம்ப வைத்துள்ளார்.
மேலும், பயிற்சி வகுப்பிற்காக திருச்சியிலுள்ள மையத்திற்குச் செல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதனை நம்பிய தினேஷ் ரயில்வே துறையில் எழுத்தர் (CLERK) வேலை கிடைக்கும் என்ற ஆசையில் புஷ்பராஜிடம் மொத்தம் நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.
ரயில்வே துறையில் வேலை உறுதி
தினேஷின் நண்பர்கள்11 பேரிடம் தலா மூன்று லட்சம் ரூபாயும், மேலும் சிலரிடமும் பல லட்சம் ரூபாய் என மொத்தமாக 55 லட்சம் ரூபாய் வரை பணத்தை புஷ்பராஜிடம் கொடுத்துள்ளனர்.
பணத்தைப் பெற்றுக்கொண்ட அவர் தினேஷ் உள்ளிட்டோர் பயிற்சி வகுப்பு குறித்தும், வேலை குறித்தும் கேட்டபோதெல்லாம் புஷ்பராஜும், விஜயகுமாரும் பல்வேறு காரணங்கள் கூறி நாள் கடத்திவந்துள்ளனர்.
புஷ்பராஜின் போலி அடையாள அட்டை சிறிது நாள்களுக்குப் பின், தெற்கு ரயில்வேயில் தங்கள் அனைவருக்கும் வேலை உறுதி ஆகிவிட்டதாகக் கூறி, அதற்கான மருத்துவச் சான்றிதழ், அடையாள அட்டை, வேலையில் சேர்வதற்கான ஆணை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகக் கொடுத்துள்ளனர்.
போலி ஆணையத்தால் ஏமாற்றம்
அதைத் தொடர்ந்து தினேஷ் உள்ளிட்டோர் வேலைக்குச் சேர்வதற்கான ஆணையைப் பெற்றுக்கொண்டு தெற்கு ரயில்வே அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட ஆணைகள் போலியானவை எனத் தெரியவந்தது.
மேலும் புஷ்பராஜ் ரயில்வே துறையில் வேலையில் இல்லை என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர்கள் அனைவரும் சென்னை காவல் ஆணையரைச் சந்தித்துப் புகார் அளித்து, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தனர்.
இதையும் படிங்க:அமைச்சர் மருமகன் எனக்கூறி மோசடி - போலீஸ் தீவிர விசாரணை