மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் (சி.ஐ.எஸ்.எஃப்.) பாதுகாப்பை சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுமைக்கும் அமல்படுத்தக்கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தியாகிகள் நாளையொட்டி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டதற்கு தலைமை நீதிபதி சாஹி கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஹரிபரந்தாமன், கண்ணன் ஆகியோர் பங்கேற்றது வேதனையளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது நீதிமன்றத்திற்கு மிகப்பெரிய பாதிப்புகளை உருவாக்கும் என்ற தலைமை நீதிபதி, ஓய்வுபெற்ற நீதிபதிகள் அதில் பங்கேற்றதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.
இது நீதிபதிகளின் மாண்பை சீர்கெடுக்கும் செயலாக உள்ளது எனவும், இப்பேரணியின்போது ஏதேனும் பிரச்னை நிகழ்ந்திருந்தால் யார் மீது வழக்குப்பதிவு செய்வது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
நீதிபதிகளாக இருந்தவர்கள் ஓய்வுபெற்ற பிறகும் நீதிபதிகளாக கருதப்படுவர். அவ்வாறு இருக்க வேண்டியவர்கள் நீதிமன்றத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்படலாமா? இதை மன்னிக்கவே முடியாது என்றும் சாஹி தெரிவித்தார்.