கொல்கத்தா உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும், நீதிமன்ற ஊழியர்களையும் ஆபாசமாக விமர்சித்து சமூக வலைத்தளங்களில் காணொளி வெளியிட்டதன் காரணமாக அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அவரது காணொளிகளை முடக்க யூ-டியூப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு உத்தரவிடக் கோரியும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த நீதிமன்றம், கர்ணன் பேச்சுக்கள் அடங்கிய காணொளிகளை நீக்க சமூக வலைதளங்களுக்கு உத்தரவிட்டதோடு, காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, நீதிபதி கர்ணனுக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பி விசாரித்தனர். தொடர்ந்து அவரை கடந்த 2ஆம் தேதியன்று கைது செய்த காவல்துறையினர், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 15 நாள் நீதிமன்ற காவலில் சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைத்தனர்.
கர்ணன் பிணைக் கோரிய மனு ஏற்கெனவே ஜார்ஜ் டவுன் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கடந்த 14ஆம் தேதி மீண்டும் பிணைக் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.