கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக, அண்மையில் அன்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக எம்.பி ஆர்.எஸ். பாரதி பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பேசுகையில், பட்டியலின மக்களையும், ஊடகத்தினரையும் ஒருமையில் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், அதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஆர்.எஸ். பாரதி, “சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்ற கலைஞர் வாசகர் வட்ட தொடக்க நிகழ்ச்சியில், நான் பேசியது குறித்து என் மீதும், திராவிட முன்னேற்றக் கழகம் குறித்தும் சிலர் காழ்ப்புணர்ச்சியோடு விஷமப் பிரசாரம் செய்து வருகின்றனர்.
கருணாநிதி வரலாறு குறித்து நான் பேசும்போது, அதற்கு முன் தினம் திராவிட இயக்கங்கள் குறித்தும், பெரியார் குறித்தும் பாஜகவின் ஹெச்.ராஜா, மிக கேவலமாகப் பேசி இருப்பதைக் கேட்டேன், பெரியாரைத் தேச துரோகி என்றெல்லாம் பேசியிருக்கிறார்கள்.
அப்படி பேசியவர்களுக்கு பதிலளிக்கும் வகையில், ஆவேசத்தில் சில நாய்கள் என்று சொன்னேன். ஆனால், அதை விட கேவலமாக துரோகி, தேச துரோகி, விஷமி, இன துரோகி என்று கருணாநிதி குறித்து பேசியுள்ளபோது, என்னைப் போன்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இன்று வழக்கறிஞர்களாக வர கருணாநிதி போன்றவர்களே காரணம்.