சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் உள்ள சரக்குப் பிரிவிற்கு, ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து பெருமளவு கடத்தல் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலர்கள், பன்னாட்டுச் சரக்குப் பிரிவு அலுவலகத்திற்கு வந்தனர். சென்னைக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் சரக்கு பார்சல்களைக் கண்காணித்தனர்.
போலி முகவரிக்கு பார்சல்
அப்போது, துபாயிலிருந்து வந்த பார்சல்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது துபாயிலிருந்து சென்னை முகவரிக்கு வந்திருந்த ஒரு பார்சல் மீது அலுவலர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
அந்த பார்சலில் இயந்திரங்களுக்குத் தேவையான உதிரிப்பாகங்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனாலும் சந்தேகத்தின் பேரில் அந்த பார்சலில் இருந்த செல்போன் எண்ணை அலுவலர்கள் தொடர்பு கொண்டனர். அந்த எண் உபயோகத்தில் இல்லை எனத் தெரியவந்தது. அந்த பார்சலில் இருந்த முகவரியும் போலியானது என்று தெரியவந்தது.