குடும்பத்தலைவிக்கு ரூ.1000 உதவித்தொகை
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற திமுகவின் தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்தது.
ஆனால், குடும்ப அட்டையில், குடும்பத் தலைவராக பெண் இருந்தால் மட்டுமே ரூ.1,000 வழங்கப்படும் என்றும், குடும்ப தலைவராக ஆண் இருந்தால் தொகை வழங்கப்படமாட்டாது என்று பரவிய தவறான தகவல்களால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதனிடையே, பலர் குடும்ப அட்டைகளில் பெண்களை குடும்பத் தலைவராக மாற்ற விண்ணப்பித்து வருகின்றனர்.
குடும்பத் தலைவிகளுக்கான, ரூ.1,000 உதவித் தொகை திட்டம் PHH, PHH-AAY, NPHH ஆகிய 3 வகையான குறியீடுகளில், ஏதேனும் ஒன்று உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என அரசு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.