தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் வழக்கு - காவல்துறைக்கு கூடுதல் அவகாசம் வழங்கி உத்தரவு - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட ரவுடி சங்கரின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு செப்டம்பர் 8 ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

court
court

By

Published : Sep 4, 2020, 2:44 PM IST

கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ரவுடி சங்கர், ஆகஸ்ட் 21 ஆம் தேதி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவ்வழக்கை சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கூறியும், உடலை மறு உடற்கூறாய்வு செய்யக் கோரியும், அவரது தாயார் கோவிந்தம்மாள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, உடற்கூறாய்வு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய, எழும்பூர் பெருநகர மேஜிஸ்ட்ரேடுக்கு உத்தரவிட்டு, காவல்துறையும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இன்று மீண்டும் இவ்வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை சார்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதுவரை 6 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து மேஜிஸ்ட்ரேட் அறிக்கை வராததால் விசாரணையை செப்டம்பர் 8 ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சித்த மருத்துவம் மீது பாகுபாடு - மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details