ஆழ்வார்பேட்டை பருவா நகர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் அறம்மாள். நேற்று முந்நாள் இவர் தனது வீட்டருகே குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத எட்டு பேர், ரத்தக்கறை படிந்த கத்தி மற்றும் கைகளைக் குழாய் தண்ணீரில் கழுவியுள்ளனர். இதனை கண்ட அறம்மாள், அவர்களை கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் வாக்குவாதம் முற்றிய நிலையில் அக்கும்பலில் ஒருவர், கையில் வைத்திருந்த கத்தியால் அறம்மாளை சரமாரியாக வெட்டியுள்ளார். தடுக்க வந்த அறம்மாளின் மகன் அருணையும் வெட்டிய அக்கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளது. படுகாயமடைந்த அறம்மாள் மற்றும் அருணை மீட்ட அப்பகுதி மக்கள், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிகழ்வு தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தேனாம்பேட்டை காவல்துறையினர், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து அக்கும்பலைத் தேடினர். பிறகு அதே பகுதியில் பதுங்கியிருந்த அந்த 8 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரவுடிகளான மணி, அஜித், சூர்யா, ஜீவா, பிரகாஷ், குள்ளா, விக்கி, மணி ஆகியோர் என தெரியவந்தது.
ரவுடிகள் தாக்கியதில் காயமடைந்த சிலம்பரசன் மேலும், இவர்கள் 8 பேரும் கிண்டி மடுவாங்கரையில் உள்ள கூரியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த விக்ரம் மற்றும் சிலம்பரசன் ஆகியோரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, செல்போன் பறிக்க முயன்றிருக்கின்றனர். தர மறுத்த இருவரையும், அந்த கும்பல் வெட்டிவிட்டு, அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை பறித்து வந்துள்ளது. அதன்பின்னர் தான் ஆழ்வார்பேட்டைக்கு வந்து அறம்மாளிடம் ரவுடி மணி என்கிற வாண்டு மணி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெட்டிவிட்டு தப்பியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ரவுடிகளால் வெட்டப்பட்ட விக்ரம் அவர்களிடமிருந்து நான்கு செல்ஃபோன்கள், மூன்று கத்திகள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை தேனாம்பேட்டை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ரவுடிகளில் வாண்டு மணி மற்றும் அஜித் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. படுகாயமடைந்த நால்வரில் விக்ரம் மற்றும் அறம்மாள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவை கண்டித்த கணவர்: தூக்கமாத்திரை கொடுத்து கொன்ற மனைவி!