சென்னை:வழக்கறிஞர் ஜெகநாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில், ஏற்கனவே பக்தர்களின் வசதிக்காக பழனி முருகன் கோயிலில் கேபிள் ரோப்கார் வசதி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 33 மலைக்கோயில்களில் கேபிள் ரோப் கார் வசதி செய்யதர நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து விரிவான திட்ட அறிக்கையைத் தயார் செய்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், "ஏற்கனவே ஐந்து மலைக்கோயில்களில் கேபிள் ரோப்கார் வசதி செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
குறிப்பாக திருத்தணி மலை திருச்செங்கோடு மலை, திருச்சி மலைக்கோட்டை, திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட ஐந்து மலைக்கோவில்களில் இந்த வசதி ஏற்பாடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மற்ற கோயில்கள் எல்லாம் சிறிய மலைகளாக உள்ளதால் அதற்கான வாய்ப்பு இல்லை.
அந்த மலைக்கோயில்களில் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. சோளிங்கர், அய்யன் மலை ஆகிய இரண்டு கோயில்களில் 80 விழுக்காடு பணிகள் நிறைவடைந்துவிட்டன" என்று தெரிவித்தார். இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை முடித்துவைத்தனர்.
இதையும் படிங்க: மலைக்கோயிலுக்கு முதியவரை முதுகில் தூக்கிச்சென்ற காவலர்; குவியும் பாராட்டு