நாகை:
தமிழ்நாடு முழுவதும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், நாகை மாவட்டம் வேதாரண்யம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் ஓட்டுனர்களுக்கு பொது மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.
தஞ்சை:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கார் வேன் ஓட்டுநர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் காவல் துறை, நாடி மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்டது. அதில் நோய்தொற்று உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு நாடி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி:
பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி உட்கோட்ட போக்குவரத்து காவல் துறை சார்பில் 200க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு வாகனப் பேரணி மகாதானபுரம் ரவுண்டானா முதல் கன்னியாகுமரிவரை நடைபெற்றது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் 31ஆவது போக்குவரத்து வார விழா தொடங்கப்பட்டு பொதுமக்கள், மாணவர்கள் பார்வைக்காக செங்கம் புதிய பேருந்து நிலையத்தில், போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது உள்ளிட்டவற்றை குறித்தும் விளம்பர பதாதைகள் வைக்கப்பட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 31ஆவது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி போக்குவரத்து காவல் துறை மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் துறை சார்பில் தலைக்கவசம் அணிவது, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.