தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

டெண்டர் முறைகேடு - முதலமைச்சரை விசாரிக்கக் கோரி திமுக வழக்கு - எடப்பாடி பழனிசாமி

சென்னை: தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலை அமைக்க டெண்டர் கோரியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கக் கோரி திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

palanisami
palanisami

By

Published : Jun 13, 2020, 12:42 PM IST

தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி ஆகிய பகுதிகளில் 462 கிலோ மீட்டர் தூரத்திற்கு, சாலைகள் விரிவாக்கத்துக்கு 1,165 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், வழக்கமாக ஆண்டுதோறும் டெண்டர் பிறப்பிக்கப்படும் நிலையில், இந்த டெண்டர் வழக்கத்திற்கு மாறாக ஐந்து ஆண்டுகளுக்கு கோரப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஆண்டுதோறும் டெண்டர் கோரும் போது, ஓராண்டுக்கு 100 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும் எனவும், அந்த வகையில் 500 கோடி ரூபாய் வரை மட்டுமே செலவாகும் எனவும், தற்போது 800 கோடி ரூபாய் வரை அதிக செலவில் டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, ஒப்பந்ததாரர்கள் டெண்டர் ஆவணங்களை சமர்ப்பிக்க இயலாத நிலையில், துறை அமைச்சரான முதலமைச்சருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆர்.எஸ்.பாரதி அதில் தெரிவித்துள்ளார்.

இந்தப் பேரிடர் காலத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், சாலை அமைக்க டெண்டர் கோரி முறைகேடுகளில் ஈடுபட்டது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் புகார் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்தப் புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மனுவில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: எனது பெயரில் தவறான தகவல் பரப்பப்படுகிறது: முதலமைச்சர் ட்வீட்!

ABOUT THE AUTHOR

...view details