தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிகரிக்கும் யானை-மனித மோதல்கள்! காரணம் என்ன?

சென்னை: தமிழக வனப்பகுதிகளில் யானை தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அண்மைக்காலமாகவே அதிகரித்து வருகிறது. கடந்த 2019-20ல் மட்டும் இதில் 58 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதற்கு காரணம் யானைகளா? மனிதர்களா? அரசா?

human
human

By

Published : Feb 20, 2021, 7:12 PM IST

நாடாளுமன்றத்தில் புள்ளிவிவரம் ஒன்றை கூறிய மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலைத்துறை இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 246 பேர் யானை தாக்கி உயிரிழந்துள்ளதாகவும், சென்ற சில ஆண்டுகளின் சராசரியான 50ஐ தாண்டி 2020 ஆம் ஆண்டில், முதல் முறையாக 58 பேர் இதில் பலியாகியுள்ளதாகவும் தெரிவித்தார். அச்சம் தரக்கூடிய இத்தரவுகளை, அளிப்பது மட்டும்தான் அரசின் வேலையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

காப்புக்காட்டு பகுதிகளில் வாழும் மக்கள், தங்களது விவசாய நிலங்களை பாதுகாக்கும் வகையில் வேலிகள் அமைப்பதால், வேறு வழியின்றி யானைகள் ஊருக்குள் புகுகின்றன. அப்போது தன்னை தாக்கிவிடுவார்களோ என்ற அச்சத்தில் யானையும், தங்களையும் உடைமைகளையும் துவம்சம் செய்துவிடுமோ என்று மனிதர்களும் மோதிக்கொள்வதுதான், யானை-மனித மோதல்கள். ஆனால், இதுமட்டும்தானா? யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டுவது, சாலை, ரயில் பாதை அமைப்பது என அடுக்கிக்கொண்டே போகலாம். இவ்வகை மோதல்கள் கோயம்புத்தூர், நீலகிரி வனப்பகுதிகளில் அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகின்றன.

யானை வழித்தடத்தில் சாலைகள், வீடுகள்...

யானைகள் மனிதர்களை தாக்க வன அதிகாரிகளும்தான் காரணம் என்று குற்றஞ்சாட்டும், ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் இயக்க ஒருங்கிணைப்பாளரான விஜய் கிருஷ்ணராஜ், காப்புக்காடுகளையும், வழித்தடங்களையும் முறையாக கண்காணிக்காமல், காடுகளை ஆக்கிரமிக்கும் குற்றவாளிகளுக்கு துணை போவதாகவும் கூறுகிறார். மேலும், யானை வழித்தடங்களில் பள்ளி, கல்லூரி, தங்கும் விடுதி என பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய கிருஷ்ணராஜ், யானைகளுக்கு பிடித்த வாழை, சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்கள் காப்புக்காடுகளின் அருகில் பயிரிடப்படுவதாலேயே இந்த அவலம் ஏற்படுவதாகவும் கூறினார்.

’வழித்தடங்களை பராமரிக்க தவறியதே யானை-மனித மோதல் அதிகரிக்க காரணம்’

பல்லுயிர் தன்மையை பேணுவதில் பெரும் பங்காற்றும் யானைகளின் வழித்தடங்களை பராமரிக்க தவறியதே, யானை-மனித மோதல்கள் அதிகரிக்கக் காரணம் என்கிறார், வன விலங்கு ஆராய்ச்சியாளரான, அசோக சக்கரவர்த்தி. அண்மையில் கோயம்புத்தூரில் உள்ள காப்புக்காடு பகுதிகளில் சுமார் 200 செங்கல் சூளைகள் செயல்படுவது கண்டறியப்பட்டு, அவற்றை உடனடியாக அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அரசு அதனை கண்டுகொள்ளவில்லை என்று குற்றஞ்சாட்டும், வன விலங்கு ஆர்வலர் முரளிதரன், இவை தொடர்ந்தால் மனித உயிர்கள் பறிபோவது, மேலும் அதிகரிக்கும் எனவும் எச்சரித்தார்.

ஆனால், யானை வழித்தடங்கள் அதிகாரிகளின் உதவியோடு ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக எழும் புகாரை வனத்துறை முற்றிலுமாக மறுக்கிறது. இதுபற்றி, நம்மிடம் பேசிய வனத்துறை உயர் அதிகாரி ஒருவர், ”அனைத்து காப்புக் காடுகளில் உள்ள வழித்தடங்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. முக்கிய ரயில் வழித்தடங்களின் அருகே யானைகளுக்கான சுரங்கப் பாதைகள் கட்டுவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. வருங்காலத்தில் மனித-விலங்கின இறப்பு விகிதம் கட்டுக்குள் இருக்கும். ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

'2019-20ல் மட்டும் இதில் 58 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்'

நம்மிடையே புழக்கத்தில் உள்ள ஒரு சொலவடை, ’வாய்க்கால் வரப்புச் சண்டை’. யானைக்கும் மனிதனுக்கும் நிகழ்வது அதுதான். ஆனால், வாய்க்காலும், வரப்பும் யானையினுடையது என்பதை, மனிதன் (அரசு) உணரும் போதுதான் இந்தச் சண்டை தீரும். காற்றின் திசை உணர்ந்து காடுகளின் உள்ளே யானைகள் தனக்கான வழித்தடங்களை ஏற்படுத்திக்கொள்ளும். அவ்வழியில் நாம் சுவற்றை எழுப்பினால் அது எங்கே செல்லும்? பாவம் அதற்கு ஐந்து அறிவுதானே?

பாவம் அதற்கு ஐந்து அறிவுதானே?

இதையும் படிங்க: ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழா: மஞ்சுவிரட்டில் 200-க்கும் மேற்பட்ட காளைகள்!

ABOUT THE AUTHOR

...view details