சென்னை:
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் 2022-23ம் ஆண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்பு சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது. அதில், "வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கான வரவு செலவுத் திட்டம் 2022-23 ஆம் நிதி ஆண்டில் சுமார் 7 ஆயிரத்து 474 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் 94 வருவாய் கோட்டங்கள், 313 வட்டங்கள், ஆயிரத்து 195 குறுவட்டங்கள், 16 ஆயிரத்து 743 வருவாய் கிராமங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்:
* விடுதலை போராட்ட வீரர் ஓய்வூதியத் திட்டங்களுக்காக 2022-23 ஆம் நிதியாண்டில் ரூ.15.60 கோடி மாநில அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 2022ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு வேட்டிகளும் சேலைகளும் பயனாளிகளுக்கு வழங்குவதற்காக ரூ.484.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 1.80 கோடி சேலைகளும் 1.80 கோடி வேட்டிகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
* 2021-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில், மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையத்துக்கு வரப்பெற்ற 7,539 புகார்கள் தீர்வு காணப்பட்டன.
* வறட்சி நிலையை கண்காணித்து தகவல் அளிக்கும் வசதியை TN SMART செயலியில் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இது வரும் ஜூன் மாதம் முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
* 2021-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் பேரிடர் தொடர்பான 16 எச்சரிக்கை தகவல்கள் 28,91,931 நபர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்பட்டுள்ளன.
* கடந்த ஆண்டு மழை வெள்ளம் காரணமாக, மனித உயிரிழப்புக்கு கால்நடை இழப்பு மற்றும் குடிசை சேதம் ஆகியவற்றிற்கு 96,273 குடும்பங்களுக்கு ரூ.32.66 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.
* பாதிப்பிற்குள்ளான 1.80 லட்சம் ஏக்கர் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு உயர்த்தப்பட்ட நிவாரணமாக 3.59 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.168.37 கோடி வழங்கப்பட்டுள்ளது.
* பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் பல்வேறு துறைகளுக்கு தமிழ்நாடு அரசு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
* 2021-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணம் வழங்கவும், மறுசீரமைப்புக்காகவும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.352.85 கோடி தமிழ்நாடு அரசுக்கு விடுவித்துள்ளது. இது மத்திய அரசிடம் கோரப்பட்ட மொத்தத் தொகையான ரூ.6,230.45 கோடியில் 5.66% மட்டுமே.
* தமிழ்நாட்டில் உலக வங்கி நிதி உதவியுடன் கடலோர பேரிடர் குறைப்பு திட்டம் ரூ.1,560.19 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டது.
* கரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாடு அரசு ரூ.9,171.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் கரோனா நோய்த்தொற்றின் காரணமாக உயிரிழந்த 55,743 நபர்களது குடும்பங்களுக்கு ரூ.278.715 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமை நிலைநாட்டப்படும்' - அமைச்சர் துரைமுருகன்