தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'புவியியலைப் புரிந்துகொண்டு திட்டங்களை வகுக்க வேண்டும்' - சென்னை வெள்ளம் தடுப்பு

சென்னையின் புவியியலைப் புரிந்துகொண்டு திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு சென்னை பெருநகர வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மை குழுத் தலைவர் திருப்புகழ் ஆலோசனை வழங்கியுள்ளார்.

சென்னை பெருநகர வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மை குழுத் தலைவர் திருப்புகழ், Chennai Flood Risk Mitigation and Management Committee head retired IAS Thiruppugazh
Chennai Flood Risk Mitigation and Management Committee head retired IAS Thiruppugazh

By

Published : Nov 28, 2021, 7:47 AM IST

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலங்களில் அதிகளவிலான மழைப் பொழிவின்போது சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதனைத் தடுக்கவும், இதற்கு நிரந்தரமான தீர்வுகாணவும் அண்மையில் தமிழ்நாடு அரசு, ஓய்வு பெற்ற மூத்த ஐஏஎஸ் அலுவலர் திருப்புகழ் தலைமையில் பெருநகர சென்னை வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.

இந்தக் குழு மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப் பேரிடர் தணிப்பு மற்றும் மேலாண்மை தொடர்பாகவும், வெள்ள நீர் தேங்காமல் தடுக்க மழை நீர் வடிகால் கால்வாய் அமைப்பது தொடர்பாகவும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ஆலோசனை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தக் குழுவின் முதல் கூட்டம் சென்னை மாநகராட்சித் தலைமை அலுவலகத்தில் ஓய்வுபெற்ற மூத்த ஐஏஎஸ் அலுவலர் திருப்புகழ் தலைமையில் நேற்று (நவம்பர் 27) நடைபெற்றது. இதில் குழுவின் உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மூன்று கால திட்டங்கள்

சென்னையில் வெள்ளம் ஏற்படாமல் நிரந்தரமான தீர்வு காண, மிகக் குறுகிய (Short term) காலத் திட்டம், குறுகிய (Midterm) காலத் திட்டம், நீண்ட காலத் (Long term) திட்டம் என மூன்று கால அடிப்படையில் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்குத் தயாராகும் வகையில், சென்னையின் புவியியல், சூழலியல் குறித்தான கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, திட்டங்களை வகுக்கும்போது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல் மற்றும் திட்ட முறைகள் அடிப்படையில் திட்டங்களை வகுக்க வேண்டும் எனவும், தொழில்நுட்பக் குழு, பொறியியல் குழு, புவியியல் - சுற்றுச்சூழல் குழு, பேரிடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக் குழு, நிவாரண குழு உள்ளிட்ட குழுக்களாகப் பிரிந்து அறிவியல் பூர்வமான தீர்வினை மூன்று காலத் திட்ட அடிப்படையில் அடுத்த ஆண்டு மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பு தயார் செய்ய வேண்டும் எனவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

சென்னை குறித்து அறிவியல்பூர்வமான தரவுகளைக் கொண்ட தனியார் ஆர்வலர்கள், செயல்பாட்டாளர்களுடன் கலந்தாலோசித்து திட்டங்களை வகுக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Chennai Rains: மிரட்டும் மழை; பணிகளை முடுக்கி விடும் முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details