முதலமைச்சர் முதல் எதிர்க்கட்சி தலைவர் வரை பரப்புரை செய்ய தடை கோரி வழக்கு!
சென்னை: அரசு பதவி வகிக்கும் முதலமைச்சர் முதல் எதிர்க்கட்சி தலைவர் வரை தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்ய தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வகுக்கப்பட்ட தேர்தல் நடத்தை விதிகளில், அமைச்சர்கள் தங்கள் அலுவல் சார்ந்த பணியுடன், தேர்தல் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்றும், அரசு வாகனங்களை தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
அரசு பதவி வகிக்கும் அமைச்சர்கள், தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு பரப்புரை செய்வது வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்ய தடை விதிக்க கோரி, அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி நிறுவனத் தலைவர் ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தேர்தல் பரப்புரையின் போது, அமைச்சர்கள் தங்கள் அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்களா? எனக் கண்காணிக்க எந்த நடைமுறையும் இல்லை என்பதால், அரசு சம்பளம் பெறும் அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்ய அனுமதிக்க கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.