சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று (ஜூன் 07) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி நேற்றைய (ஜூன் 06) உச்ச நீதிமன்ற உத்தரவின் நகல் தாக்கல் செய்யப்பட்டது. அதை படித்துப் பார்த்த நீதிபதி, பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளதை சுட்டிக்காட்டி, வழக்கில் தான் என்ன உத்தரவை பிறப்பிக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.
இதற்கு விளக்கமளித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தரப்பு மூத்த வழக்கறிஞர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் என்ற பெயரில் கட்சியில் இல்லாத ஒரு அமைப்பின் பெயரில் அனுப்பப்பட்டுள்ள நோட்டீசில் யார் கையெழுத்தும் இல்லை என்பதால், ஜூலை 11 பொதுக்குழு நோட்டீசே செல்லாதது, என தெரிவித்தனர்.
கடந்த ஜூன் 23 பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படாததால் அவர்களால் செயல்பட முடியாது எனக் கூறி ஜூலை 11 பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும் எனவும் அவர்கள் வாதிட்டனர்.
இடைக்கால பொதுச் செயலாளர் அறிவிப்பு செய்ய இந்த பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளதாகவும், ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டது எனக் கூற முடியாது எனவும் வாதிட்டனர்.