சென்னை:அதிமுக பொதுக்குழு கூட்டுவதற்கு தடை விதிக்கக்கோரி திண்டுக்கல் சூரியமூர்த்தி தொடர்ந்த வழக்கும், அதை நிராகரிக்க கோரி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மனுவையும் சென்னை உரிமையியல் நீதிமன்றம், ஜுலை 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ஆம் தேதி நடக்க உள்ளதாக கூறி, கூட்டத்துக்கு தடை கோரிய வழக்கை முன் கூட்டியே விசாரிக்கக் கோரி சூரியமூர்த்தி தாக்கல் செய்த மனு நீதிபதி பிரியா முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் சூரியமூர்த்தி மனு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய நாளை (ஜூன் 22) வரை அவகாசம் கோரப்பட்டது.
அதிமுக நிர்வாகிகள் தரப்பில், எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி சார்பில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து மனுதாரர் போட்டியிட்டார் என்றும், ஊடக விளம்பரத்திற்காகவே வழக்கு தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தில் நாளை (ஜூன் 22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருப்பதால், இந்த வழக்கை நாளை ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
எதிர் மனுதாரர்களாக உள்ள சில நிர்வாகிகளுக்கு மனு கிடைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, அனைத்து எதிர்மனுதாரர்களுக்கும் மனுவின் நகலை வழங்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளைக்கு (ஜூன் 22) ஒத்திவைத்துள்ளார்.
இதையும் படிங்க:மேகதாது விவகாரம்: 'மத்திய அரசு நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்' - அமைச்சர் துரைமுருகன்