தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையில் ஆண்டுதோறும் புதிதாக தொடக்கப் பள்ளிகளும், தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. மேலும் அப்பள்ளிகளில் பணிபுரிவதற்கு தேவையான ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களை நியமிப்பதற்கும் அரசு நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கும்.
அதனடிப்படையில் புதிதாக தொடங்கப்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியாளர்கள் உரிய சம்பளத்தைப் பெறுவதற்கு பள்ளிக் கல்வித் துறை அரசுக்கு கடிதம் எழுதி அனுமதி கேட்கும். இது போன்ற அனுமதிகளை அரசு தருவதில் சிறிது காலதாமதம் ஆவதால் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் கால தாமதம் ஏற்படும். இதை கருத்தில்கொண்டு பள்ளிக் கல்வித் துறை 19,427 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கான தற்காலிக பணியிடங்களை நிரந்தரபணியாக மாற்ற அனுமதி அளித்துள்ளது.
ஆசிரியர்கள் சம்பள பிரச்னைக்கு தீர்வு! - 19,427 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கான தற்காலிக பணியிடங்களை நிரந்தரம் பணியாக மாற்ற அனுமதி
சென்னை; பள்ளிக் கல்வித் துறை 19,427 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கான தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியாக மாற்ற அனுமதி அளித்துள்ளதால், ஆசிரியர்கள் சம்பள பிரச்னை தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில், ”உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அரசாணை 1997ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி மாணவர், ஆசிரியர் எண்ணிக்கை அடிப்படையில் தொடக்கப் பள்ளியிலும் நடுநிலைப் பள்ளிகளிலும் பணியாளர் நியமனம் செய்ய நெறிமுறைகள் வகுக்கப்பட்டு அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில் 15.6.2017 அன்று நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையில், பள்ளிக் கல்வித் துறையில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாகவும் , தற்காலிக பணியிடங்களாகவும் பராமரிக்கப்பட்டுவருகின்றன. இவற்றில் தற்காலிக பணியிடங்களுக்கு பணியிட தொடர் நீட்டிப்பு வழங்குவதில் ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்கும் வகையில் முதல் கட்டமாக சுமார் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும்” என கூறப்பட்டுள்ளது.