திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராக அமிர்தம் என்ற பெண் உள்ளார். பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் பதவியேற்றது முதல், ஊராட்சி மன்ற செயலாளர் சசிக்குமார் உரிய மரியாதை கொடுக்காத நிலையில், ஆவணங்களையும் முறையாக சமர்ப்பிக்காமல் இருந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன.
அதேபோல் துணைத்தலைவர் ரேவதியின் கணவர் விஜயகுமார் மற்றும் முன்னாள் தலைவர் ஹரிதாஸ் ஆகியோரின் தொடர் மிரட்டலுக்கும் அமிர்தம் ஆளாகியுள்ளார். இதன் வெளிப்பாடாக சுதந்திர தின கொடியேற்று விழாவில் அமிர்தத்தை தேசியக்கொடி ஏற்றவிடாமல் இந்த மூவரும் தடுத்தனர். இதுதவிர தலைவர் நாற்காலியில் அமர்வதை தடுப்பது, சாதிப்பெயரை குறிப்பிட்டு அழைப்பது, செலவு ஆவணங்களை தராமல் மறைப்பது, துணைத்தலைவரின் கணவர் மூலம் ஆவணங்கள் கையாளப்படுவது போன்ற பல முறைகேடுகளை அமிர்தம் தட்டிக்கேட்டுள்ளார்.
இதையடுத்து தன் மீதான கொடுமைகள் குறித்து காவல் நிலையத்தில் அமிர்தம் அளித்த புகாரில், ஹரிதாஸ், விஜயகுமார், சசிக்குமார் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பின், மூவரும் நீதிமன்றத்தில் சரணடைந்து, பிணை பெற்றனர்.