சென்னை:காசிமேட்டில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 10 மீனவர்களை மீட்க வலியுறுத்தி, மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்
சென்னை காசிமேடு நாகூரார் தோட்டம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் திருவொற்றியூர் குப்பம், திருச்சினாங் குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் லட்சுமணன் சிவகுமார், பாபு, பார்த்திபன், திருவொற்றியூர் குப்பத்தைச் சேர்ந்த முருகன், கர்ணன் தேசப்பன், ரகு, லட்சுமிபுரம் குப்பத்தைச் சேர்ந்த தேசப்பன் உள்பட 10 மீனவர்கள் 10 நாட்களுக்கு தேவையான உணவு பொருள்களை எடுத்து கொண்டு கடலுக்குள் 70 நாட்டிகல் தூரத்திற்கு ஜூலை மாதம் 22ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர்.
ஏழு நாட்களில் கரைக்கு திரும்ப வேண்டிய மீனவர்கள், 48 நாட்கள் ஆகியும் இதுவரை கரை திரும்பவில்லை. இது குறித்து மாயமான மீனவ குடும்பத்தினர், சென்னை காசிமேடு மீன்வளத் துறை உதவி இயக்குநர், காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் ஆகியோரிடத்தில் புகார் அளித்தனர். மேலும், மீன்வளத் துறை, காவல்துறை சார்பில் பல்வேறு கட்டமாக காணாமல் போன மீனவர்களை தேடும்பணி நடைபெற்று வருகிறது.
இச்சூழலில் காசிமேட்டிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்கள் மாயமாகி இதுவரை 48 நாட்கள் ஆகியும் எந்த தகவலும் கிடைக்காத நிலையில், கடலில் மாயமான மீனவர்களை மீட்டு தரக்கோரி தமிழ் மக்கள் உரிமை கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுவண்ணாரப்பேட்டை நாகூரார் தோட்டம் பகுதியிலிருந்து, சூரிய நாராயணா சாலை வழியாக ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் காசிமேடு மீன்பிடித் துறை உதவி இயக்குநர் வேலனிடம் புகார் மனு அளித்தனர்.