சென்னை: தமிழ்நாடு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரநாத், இன்று (ஜூன் 8) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், 'தமிழ்நாட்டில் எம்.ஆர்.பி தேர்வில் தேர்ச்சி பெற்று, எம்.ஆர்.பி மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 7 ஆண்டுகளாக அவர்கள் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை. ரூ.14,000 மட்டுமே தொகுப்பூதியமாக மாதம்தோறும் பெற்று வருகின்றனர்.
அவர்களுக்கு பணிநிரந்தரம் கோரி பல கட்டப் போராட்டங்களை தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர் நலச்சங்கம் நடத்தியுள்ளது. ஆனால், அவர்களுக்கு இதுவரை பணிநிரந்தரம் கிட்டவில்லை. இந்நிலையில், தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் எம்.ஆர்.பி ஒப்பந்த செவிலியர்களுக்கு பணிநிரந்தரம் வழங்கப்படும் என்ற திமுக-வின் தேர்தல் அறிக்கை நம்பிக்கை அளித்தது.
எனவே, திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு பணி நிரந்தரம் வழங்கிடக்கோரி, நேற்று (ஜூலை7) செவிலியர்களின் போராட்டம் சென்னையில் நடைபெற்றது. போராடிய செவிலியர் சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசிய அமைச்சர், அடுத்த 6 மாதங்களுக்குள் 5,000 செவிலியர்களுக்கு பணிநிரந்தரம் வழங்குவதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.