சென்னை: Request to set up Medical University: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 2011ஆம் ஆண்டில், சித்தா, பிற இந்திய மருத்துவ முறைகள், ஹோமியோபதி மருத்துவ முறைகளுக்கென்று தனியாக பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அது மட்டுமின்றி, மேற்கூறிய மருத்துவ முறைகளுக்கான வரலாற்றுப் பின்னணி, தனிப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட வேண்டியதற்கான காரணம், இவற்றில் பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைகள், பல்கலைக்கழகத்தின் பெயர் ஆகியவை குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் தகவல்களை அளித்திருந்தார்.
அரசாணை வெளியீடு
அதன்படி அன்றைய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை முதன்மைச் செயலாளர் வி.கே.சுப்புராஜ் 14.1.2011 அன்று வெளியிட்ட அரசாணையில், 'இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை ஆணையர் கருத்துருவை அரசு கவனத்துடன் பரிசீலித்து சித்தா, பிற இந்திய மருத்துவ முறைகள், ஹோமியோபதித்துறை மருத்துவமுறைகளுக்கென ’இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவப் பல்கலைக்கழகம்’ ஏற்படுத்த கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்க முடிவு செய்து அரசு ஆணையிடுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆட்சி மாற்றத்தால் கிடப்பில் கிடந்த பணி
அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் தமிழ்நாட்டில் "இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவப் பல்கலைக்கழகம்" ஏற்படுத்தும் நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் 2021-22ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.