தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் மயில், முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில், "தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நியாயமான வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி 2019 ஜனவரி 22ஆம் தேதியிலிருந்து 30ஆம் தேதி வரை ஒன்பது நாள்கள் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் நடைபெற்றது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக அன்றைய தமிழ்நாடு அரசால் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
பணி மாறுதல், பணியிடை நீக்கம்
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதி 17(B) மற்றும் 17(E) ஆகிய பிரிவுகளின்கீழ் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்காலிகப் பணிநீக்கமும் செய்யப்பட்டனர். பணியாற்றிய இடத்திலிருந்து தொலைதூரப் பகுதிகளுக்கு பணிமாறுதல் செய்யப்பட்டனர்.
ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தப் போராட்ட நாள்களை பணிக்காலமாகக் கருதி உத்தரவிடக் கோரிக்கை ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தப் போராட்டம்
இந்நிலையில், ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும், குற்றவியல் நடவடிக்கைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அப்போதைய தமிழ்நாடு அரசு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் அரசாணையை வெளியிட்டது.
அதன்படி சில துறைகளில் ஒழுங்கு நடவடிக்கைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஆனால், பள்ளிக்கல்வித்துறையில் சில மாவட்டங்களில் ஒழுங்கு நடவடிக்கைகள் இன்றுவரை திரும்பப் பெறப்படவில்லை. எனவே, பள்ளிக்கல்வித்துறையில் ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்பப் பெற்று அதற்குரிய ஆணைகளை சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தப் போராட்ட நாள்கள் மற்றும் தற்காலிகப் பணிநீக்க நாள்கள் ஆகியவற்றை பணி நாள்களாகக் கருதி வரைமுறைப்படுத்தியும், பழிவாங்கும் நடவடிக்கையாக பணி மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களின் மாறுதல் உத்தரவுகளை ரத்துசெய்து அவர்கள் முன்பு பணியாற்றிய இடத்தில் மீண்டும் பணியமர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அதில் கூறியுள்ளார்.