நிவர் புயல் எதிரொலியாக அரசு அலுவலகங்களுக்கு நாளை (நவம்பர் 25) பொது விடுமுறை அளிக்கப்படுவதாகவும், நிலைகேற்ப விடுமுறை நீடிப்பது தொடர்பாக பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த பொது விடுமுறையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து எந்தவித அறிவிப்பும் நிர்வாக தரப்பில் வெளியிடாததால் ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
'டாஸ்மாக் கடைகளுக்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும்' - டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம்
சென்னை: நிவர் புயலை ஒட்டி டாஸ்மாக் கடைகளுக்கு நாளை (நவம்பர் 25) விடுமுறை அளிக்க வேண்டும் என்று, டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நேற்று (நவம்பர் 24) முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நிவர் புயல் கரையை கடக்கும் போது கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறி கடலோர மாவட்டங்களை மட்டுமல்லாமல் உள்மாவட்டங்களையும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துக்கூடிய பேராபத்து உள்ளது.
பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவையின்றி பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என்று அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. கடை ஊழியர்கள், குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டு டாஸ்மாக் மதுபான கடைகளையும் மூடி முதலமைச்சர் உத்தரவிட வேண்டுமென டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.