சென்னை ஐஐடியில் வேதியியல் துறையில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பட்டில் இன ஆராய்ச்சி மாணவி, கடந்த 2017ஆம் ஆண்டு தன்னுடன் பயிலும் மாணவர் கிங்ஷீக்தேவ் ஷர்மா, சுபதீப் பேனர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ ஆகிய நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஆராய்ச்சி மாணவி, சென்னை ஐஐடியிலுள்ள உள்புகார் குழுவிலும் தமிழ்நாடு காவல் துறையிலும் புகார் அளித்துள்ளார். ஆனால், இது குறித்த புகாரில் சென்னை ஐஐடி நிர்வாகமும், சென்னை காவல் துறையினரும் போதுமான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்த மாணவி மன அழுத்தத்துக்கு ஆளாகி, 3 முறை தற்கொலைக்கு முயன்று மீட்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை:தமிழ்நாட்டிற்கு படிப்பிற்காக மேற்கு வங்கத்திலிருந்து வந்த மாணவிக்கு, சென்னை ஐஐடியில் உடன் படிக்கும் சக மாணவர்களால் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தண்டனை இந்த 2022ஆம் ஆண்டிலும் கிடைத்தபாடில்லை. தமிழ்நாட்டில் அண்மைக்காலங்களாக பெருகிவிட்ட பாலியல் குற்றங்களுக்கு இடையே வேற்றுமாநிலத்தைச் சேர்ந்த மாணவிக்கு அதிலும், பட்டியல் இனப்பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைக்கு தண்டனைப்பெற்றுத் தருவதில் என்ன அரசியல் சிக்கல்கள் உள்ளதோ என்ற பார்வையில்தான் இதைப் பார்க்கத் தோன்றுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி தமிழ்நாட்டில் தனக்கு நேர்ந்த சோகத்தை அனைத்து இந்திய மாதர் சங்கத்தினரிடம் புகார் அளித்துள்ளார்.
சென்னை டிஜிபியிடம் புகார்:அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சுகந்தி, மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து சென்னைடிஜிபி அலுவலகத்தில் இன்று (ஏப்.8) புகார் அளித்துள்ளார். பின் செய்தியாளர்களிடம் சுகந்தி கூறுகையில், 'சென்னை ஐஐடி மாணவி தன்னுடன் பயிலும் மாணவர்களால் பாலியல் வன்கொடுமை மற்றும் சாதியப்பாகுபாடுகளுக்குள்ளாக்கப்பட்ட வழக்கில் காவல்துறை உரிய வழக்குப்பதிவு மற்றும் FIR பதிவு செய்யப்பட்ட பின்பும் குற்றவாளிகளைக் கைது செய்யாமலும் இருக்கின்றது. இவ்வழக்கில் குற்றவாளிகள் சென்னையில் முன்ஜாமீன் பெற்றிருந்த நிலையில், காவல்துறை அந்த முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யாமல், மேற்கு வங்கம் சென்று அவர்களை கைது செய்ய முனைந்து இருக்கின்றது.
காவல் துறை மனுதாக்கல்:அங்குள்ள நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் முதல் குற்றவாளியை ஆஜர்படுத்திய பின் அங்குள்ள நீதிமன்றம் குற்றவாளியை விடுவித்துள்ளது. காவல்துறை குற்றவாளிகளைக் கைது செய்ய செல்வதற்கு முன்பு முன்ஜாமீனை ரத்து செய்யும் உத்தரவை நீதிமன்றத்தில் பெற்று, பின்பு கைது செய்ய சென்றிருந்தால் உறுதியாக குற்றவாளிகளைக் கைது செய்திருக்கலாம். ஆனால், தற்போது குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டப்பின்பு அவர்களின், முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் காவல்துறை மனுதாக்கல் செய்து இருக்கின்றது.
சிபிசிஐடிக்கு மாற்ற கோரிக்கை:இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு சாதகமாக ஓராண்டு காலத்திற்கும் மேலாக மெத்தனமாக செயல்பட்டு, குற்றவாளிகளைக் கைது செய்யாமல் இருந்த முன்னாள் விசாரணை அதிகாரி ஆண்டனி பிஜித்ரா மீது உரிய துறை ரீதியான நடவடிக்கையை வேண்டும். மேலும் காவல்துறை இதுவரை 8 குற்றவாளிகளில் ஒரு குற்றவாளியைக்கூட கைது செய்யவில்லை. எனவே, தாங்கள் உடனடியாக தலையிட்டு குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்திட வேண்டும். முக்கிய 3 குற்றவாளிகள் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுள்ள நிலையில் இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னை ஐஐடி பட்டியலின மாணவி பாலியல் வன்கொடுமை; சிபிசிஐடி விசாரிக்க கோரிக்கை