தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரேஷன் கடை ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க கோரிக்கை! - ரேஷன் கடை ஊழியர் களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க கோரிக்கை

சென்னை: ரேஷன் கடை ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

request for special pay for ration shop employees
request for special pay for ration shop employees

By

Published : Mar 25, 2020, 4:41 PM IST

தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் தலைவர் (சிஐடியு) கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், “கரோனா பாதிப்பு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிப்பைத் தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தமிழ்நாட்டிலும் அவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக அத்தியாவசியப் பொருள்கள் வழங்குவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர், தூய்மைப் பணியாளர்களுக்குச் சிறப்பு ஊதியம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அத்தியாவசியப் பொருள்கள் வழங்கக்கூடிய கூட்டுறவு நியாய விலைக் கடை ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு காரணமாக வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு பல்வேறு நிவாரணங்களை அறிவித்துள்ளது. அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்டவற்றோடு நிவாரணத்திற்கான சிறு தொகையும் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இவையனைத்தும் கூட்டுறவு நியாய விலைக் கடைகள் மூலம் மட்டுமே சிறப்பாக நிறைவேற்றப்படும் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.

தற்போதுள்ள பொது விநியோகத் திட்டத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு ஏற்கனவே துறை அறிவுரைப்படி கையுறை, முகக்கவசம், கிருமிநாசினி, சோப்பு, கைத்துண்டு உள்ளிட்டவை மாநிலம் முழுவதுமுள்ள கூட்டுறவு நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.

காரணம் எங்களுக்கு கிடைத்த தகவல்கள் திருப்தியடையும்படி இல்லை என்பதை பதிவு செய்யவேண்டிய அவசியமுள்ளது. முதற்கட்டமாக நியாய விலைக் கடைகளைச் சுத்தமாக, சுகாதாரமாக இருப்பதை உறுதி செய்திட வேண்டும். மக்கள் நெருக்கமாக ஓரிடத்தில் கூடாதபடி‌ விசாலமான இடங்களைத் தேர்வு செய்து பொது விநியோகத்தைத் தொடங்க வேண்டும்.

குடும்ப அட்டைதாரர்கள் வர வேண்டிய நாள், நேரம் உள்ளிட்ட விவரங்களோடு கூப்பன்களை முன்கூட்டியே வழங்கலாம். சர்க்கரை, பருப்பு, அரிசி உள்ளிட்டவற்றை முன்கூட்டியே பைகளில் சரியான எடையுடன் அடைத்து வைத்துக் கொள்வது பயனாளிகளின் நேரத்தைக் குறைக்க உதவும். பண விநியோகத்திற்கு இதர பகுதி ஊழியர்களைப் பயன்படுத்தலாம்.

பொது விநியோகத்தை உறுதி செய்வற்கு முன் ஒதுக்கீட்டை உறுதி செய்திட கோருகிறோம். இதுபோன்ற சிறப்புத் திட்டங்களை நிறைவேற்றும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மற்ற துறைகளில் வழங்குவது போன்று சிறப்பூதியம் வழங்குவதையும் உறுதி செய்வது நல்லது.

பேரிடர் காலங்களில் மக்களுக்கான பணியில் கூட்டுறவு ஊழியர்களின் பணி மகத்தானது என்பதை யாரும் மறுக்க முடியாது. கரோனா தடுப்பு நடவடிக்கையிலும் தீவரமாகப் பணியாற்றுவோம். மக்களைப் பாதுகாப்போம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details