சென்னை:தமிழ்நாட்டில் மொத்தம் 149 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. சுமார் 5000-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்துவருகின்றனர்.
இங்குப் பணியாற்றக்கூடிய மகளிர் கௌரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு காலங்களில் விடுமுறை அளிக்கப்படுவதில்லை. இந்திய மாநிலங்களிலேயே உயர் கல்வியில் தமிழ்நாடு முதலிடம் வகித்துவருவது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சூழ்நிலையில் மகப்பேறு விடுமுறை சம்பந்தமாக அரசிடம் கோரிக்கைவைத்ததற்கு, தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் தொகுப்பூதியத்தில் தற்காலிகமாகப் பணியாற்றும் மகளிர் பணியாளர்கள் 12 மாதம் ஊதியம் பெற்றால் மட்டுமே அரசாணை 91இன்படி மகப்பேறு விடுமுறை அளிக்க இயலும் எனக் கூறி நிராகரிக்கப்பட்டுவிட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அனைத்து அரசுக் கல்லூரி யுஜிசி தகுதி கௌரவ விரிவுரையாளர் சங்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர் தங்கராஜ் என்பவரால், தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு கோரிக்கை மனு நவம்பர் 6இல் அனுப்பப்பட்டது.