சென்னை: அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும் என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், 'மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக (NHIS) கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியத்தில் மாதந்தோறும் ரூ.180 பிடித்தம் செய்யப்பட்டுவருகிறது.
இத்திட்டத்தின்கீழ் நான்கு ஆண்டுகளுக்கு, பல்வேறு நோய்களுக்கான அறுவை சிகிச்சைகளுக்கு அதிகப்பட்சமாக ரூ. 4 லட்சமும், சில பிரத்யேக அறுவை சிகிச்சைகளுக்கு அதிகப்பட்சமாக ரூ.7.25 லட்சமும் வழங்கிட அரசாணையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மருத்துவக் காப்பீட்டுத் தொகை பல்வேறு நோய்களுக்குச் செலவாகும் தொகையை விடக் குறைவாக உள்ளது. குறிப்பாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, புற்று நோய் போன்ற நோய்களுக்கு ஆகும் செலவில் ஒரு சிறு பகுதியே காப்பீடாக வழங்கப்படுகிறது.
எனவே, காப்பீட்டுத் தொகையை சிகிச்சைச் செலவுகளுக்கு ஈடாக உயர்த்திட வேண்டும்.
குறைவாக தரப்படும் காப்பீட்டுத்தொகை
மேலும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை என அரசாணையில் குறிப்பிடப்பட்டாலும், காப்பீட்டு நிறுவனம் மருத்துவ சிகிச்சைகளுக்கான மொத்தச் செலவில் 20 முதல் 50 விழுக்காடு வரை மட்டுமே காப்பீட்டுத் தொகையாக வழங்குகிறது.
இதனால் அரசு ஊழியர்கள் மருத்துவச்செலவில் பெரும்பகுதியை தாங்களே கட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் உண்மையான பயனை ஊழியர்களுக்குக் கிடைக்கவிடாமல் செய்துவிடுகிறது.
இந்த விஷயத்தில் காப்பீட்டு நிறுவனம் தமிழ்நாடு அரசையும், அரசு ஊழியர்களையும் ஏமாற்றி வருவதோடு மிகப்பெரிய அளவில் ஆதாயம் பெற்று வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் மாதந்தோறும் ரூபாய் 180 வீதம் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ. 259 கோடி வரை பிடித்தம் செய்யப்படுகிறது. இதன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 1,295 கோடி வரை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் காப்பீட்டு நிறுவனம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கிய தொகையைக் கணக்கிட்டால் மிகவும் குறைவாகவே இருக்கும்.
காப்பீட்டுத்திட்டத்தின் உண்மை நோக்கம் நிறைவேறவேண்டும்
2016ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான ஒப்பந்தம், யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி (United India Insurance Company) என்ற மத்திய அரசு நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தைச் செயல்படுத்தும் துணை ஒப்பந்தத்தை எம்.டி இந்தியா (MD India) என்ற தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி அளித்துள்ளது.