நாட்டின் 71ஆவது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரை சாலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மூவர்ண கொடியேற்றினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு காவல்துறை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோர காவல்படை, விமானப்படை, குதிரைப்படை, தேசிய மாணவர் படை, அதிவிரைவுப்படை, மத்திய பாதுகாப்பு படை, துணை இராணுவப்படை, தீயணைப்புத் துறை, வனத்துறை உள்ளிட்ட துறையினரின் அணிவகுப்பு நடைபெற்றது. பின்பு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கம் மற்றும் அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறை சிறப்பு விருதுகள் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
பின்பு தமிழக காவல் துறையினரின் மோட்டார் வாகன சாகச அணிவகுப்பும், கலாசார பெருமையை விளக்கும் வகையில் பள்ளி மாணவிகள் நடனமும், தேசிய ஒருமைப்பாட்டை விளக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. தமிழக பாரம்பரியம் மட்டுமின்றி இந்திய பாரம்பரியத்தின் சில நிகழ்ச்சிகள் வட இந்திய நடனமும், காஷ்மீரியன் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.