தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கல்வியைத் தாயாக கருதியவர் ஜெயலலிதா - ஓபிஎஸ்

கல்வியைத் தாயாக கருதிய ஜெயலலிதாவின் பெயரை நீக்குவது, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சம் எனவும்; ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கு நிதி, இடம் ஒதுக்கவேண்டியது தற்போதைய அரசின் வேலை எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ops
ops

By

Published : Aug 31, 2021, 7:54 PM IST

சென்னை: ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட அனைவரும் திருவல்லிக்கேணி சமுதாய நலக் கூடத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

பேச வாய்ப்பு கிடைக்கவில்லை

இந்நிலையில் சமுதாய நலக்கூடத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், "ஜெயலலிதாவின் பெயரை நீக்குவது அரசியல் காழ்ப்புணர்வு.

இன்று சட்டப்பேரவையில் பல்கலைக்கழக பெயர் மாற்ற மசோதா குறித்து பேசுவதற்கான வாய்ப்பு கேட்டோம்; ஆனால், மறுப்புத் தெரிவித்துவிட்டனர்.

இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களில், கல்வித்துறையில் அளப்பரிய சாதனைகளை செய்தவர், ஜெயலலிதா. ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரை மாற்றங்களைக் கொண்டு வந்தவர்.

2011இல் மாநில அரசின் வருவாயில் 4இல் ஒரு பங்கை கல்விக்கு ஒதுக்கினார். மாணவர்களுக்கு 16 வகை இலவச உபகரணங்கள் தந்தவர், ஜெயலலிதா.

கல்வியைத் தாயாக கருதியவர் ஜெயலலிதா:

தமிழ்நாட்டில் 2011ஆம் ஆண்டு 27 விழுக்காடாக இருந்த உயர் கல்வி சேர்க்கையை, 50 விழுக்காடுக்கும் மேல் உயர்த்தி தேசிய சராசரியைக் காட்டிலும் அதிகமாக்கியவர், ஜெயலலிதா.

கல்வியைத் தாயாக கருதினார், ஜெயலலிதா. கலை அறிவியல் கல்லூரி உட்பட 70 கல்லூரிகளை கொண்டுவந்தார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு நெருக்கடி, நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டபோது, நிதி ஒதுக்கி கல்லூரியை காப்பாற்றியவர் ஜெயலலிதா.

'அம்மா' உணவகம் பெயரை மாற்றவில்லை என்கிறீர்கள். இன்று இருக்கும் பிரச்னை விழுப்புரம் பல்கலைக்கழகம் பெயர் பிரச்னை தான். இப்போதுதான் பல்கலைக்கழகத்தை உருவாக்கினோம். அதற்கான நிதியும், இடத்தையும் ஒதுக்க வேண்டியது தற்போதைய அரசின் வேலை" என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details