சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கரோனா தொற்றினால் பொதுமக்கள் மட்டுமல்லாது, கால்டாக்சி ஓட்டுநர்கள், வியாபாரிகள், தொழில் முனைவோர் என அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாகத் தமிழ்நாடு முழுவதும் கால்டாக்சி, வேன் உள்ளிட்ட வாகனங்கள் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பெரிதும் பாதிப்படைந்து உள்ளனர்.
2020ஆம் ஆண்டு இதில் முதல் அலையின்போது ஆறு மாதம் கழித்து தவணை செலுத்தலாம் என மத்திய அரசு அறிவித்து, வட்டி மட்டும் கட்டினால் போதும் என அறிவுறுத்தியது.
'வாடகை வாகனங்களுக்கான தவணை தொகையை கட்ட ஒரு வருட கால அவகாசம் வேண்டும்'
வாகன கடனுக்கான தவணை தொகையை கட்ட ஒருவருடம் கால அவகாசம் அளிக்காவிடில், சுமார் 25 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிப்படையும் என சாலை போக்கவரத்து தலைவர் ஆறுமுக நயினார் தெரிவித்தார்.
ஆனால் காப்பீட்டு நிறுவனங்கள் உடனடியாக வட்டி, தவணை தொகை ஆகியவற்றைக் கட்டுவதற்கு வற்புறுத்தி வந்ததால் கால்டாக்சி ஓட்டுநர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
இதனையடுத்து தங்களது முக்கியக் கோரிக்கையான வாகன கடனுக்கான தவணை தொகையை கட்ட ஒருவருடம் கால அவகாசம் வேண்டும், ஏற்கனவே வழங்கப்பட்ட அவகாசத்திற்கு போடப்பட்ட வட்டியைத் தள்ளுபடி செய்யவேண்டும். வாகனத்திற்கு போடப்பட்ட காப்பீட்டு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சுமார் 100-க்கும் மேற்பட்ட கால்டாக்ஸி சங்கத்தினர் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சாலை போக்குவரத்து சம்மேளன தலைவர் ஆறுமுக நயினார், எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தமிழ்நாடு முழுவதும் சுமார் 25 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைவார்கள் எனவும் நடவடிக்கை எடுக்காவிட்டல் இந்தத் தொழில் அழிந்துவிடும் எனவும் தெரிவித்தார்.