இது தொடர்பாக தர்மபுரி மாவட்டம் கவலைகாரன் கொட்டாயை சேர்ந்த சக்திவேல் என்ற விவசாயி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தென்பெண்ணை ஆற்றின் கிளை ஆறான சனத்குமார் ஆற்றின் அருகே அமைக்கப்படும் வீட்டுமனைகளுக்காக, அங்குள்ள நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாகவும், ஆற்றின் குறுக்கே சாலை அமைத்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக கடந்த அண்டு ஜூன் மாதம் கிராம மக்கள் சார்பாக தர்மபுரி ஆட்சியர், தாசில்தாரிடம் புகாரளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதோடு, ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து வருவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சனத்குமார் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான திமுக முன்னாள் எம்பி தாமரைச்செல்வன், நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டு வருவதாகவும், 42 கி.மீ நீளத்திற்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் விவசாய நிலங்களுக்கான நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.
இதனைக் கேட்ட நீதிபதிகள், மனுதாரர் தரப்பில் புதிதாக ஒரு மனுவை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கவும், அந்த மனு மீது 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சிகிச்சைப் பெற்றுவந்த யானைக்குப் பயிற்சி!