சென்னை: பிரார்த்தனை கூட்டங்களுக்கு யாரும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் உத்தரவிடக்கோரி ஈரோடு மாவட்டம் தொப்பம்பாளையத்தில் உள்ள பென்டகோஸ்டல் மிஷன் சர்ச் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கட்டடத்துக்கான திட்ட அனுமதி கோரி 2014இல் விண்ணப்பித்தும் அனுமதி கிடைக்கவில்லை. கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என இந்து முன்னணியினர் இடையூறு செய்வதாக மனுதாரர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்ட கட்டடத்தை பயன்படுத்த அனுமதிக்கப்கூடாது என்றும், வழிபாட்டுத் தலங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலான சத்தத்துடன் தடை செய்யப்பட்ட ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அனுமதிக்க முடியாது எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில், பிரார்த்தனை கூடத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கோரும் பென்டகோஸ்டல் மிஷன் சர்ச்சின் கோரிக்கையை நிராகரித்தார். கட்டட அனுமதி கோரிய மனுவை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
மேலும், அனைவருக்கும் மத வழிபாட்டு உரிமை அரசியல் சாசன சட்டத்தில் வழங்கப்பட்டிருந்தாலும், அது மற்றவர்களின் உரிமையில் தலையிடும் வகையில் இருக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். அனுமதி பெறாத கட்டடத்தில் மத அமைப்புகள் இயங்குவது, அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஒலி எழுப்பும் வகையில் இயங்குவது போன்றவை சட்ட நடவடிக்கைக்கு உள்பட்டது என்றும் உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளார்.