கரோனா ஊரடங்கு காரணமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 4,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒன்றிய - மாநில அரசு ஊழியர்களுக்கும் கரோனா நிவாரண தொகையாக ரூ. 4,000 வழங்குவதற்கு தடை விதிக்கக் கோரி திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்ற நபர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அரசு ஊழியர்களின் நிவாரண உதவி தொடர்பான வழக்கு முடித்து வைப்பு - Madras high court
ஒன்றிய- மாநில அரசு ஊழியர்களுக்கு கரோனா நிவாரண தொகை வழங்க தடை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
அம்மனுவில், “ஊரடங்கு கட்டுப்பாட்டால் ஒன்றிய- மாநில அரசு ஊழியர்களுக்கு இடர்பாடுகள் இருக்கலாம். ஆனால், வருமான இழப்பு இல்லை. எனவே அவர்களுக்கு கரோனா நிவாரண தொகை வழங்க தடை விதிக்க வேண்டும். அத்துடன் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதல் நிதி உதவி வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதிகள் சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், கரோனா நிவாரண தொகை வழங்கும் திட்டம் முடிந்துவிட்டதாகவும், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே இந்த நிவாரண உதவி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.