சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்தனர். பதிவு செய்த மாணவர்கள் அனைவருக்கும் ரேண்டம் எண் வழங்கப்பட்டது. அவர்களில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 45 மாணவர்கள் கட்டணம் செலுத்தி இருந்தனர்.
இவர்களில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 732 மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத 2,722 மாணவர்களின் பதிவுகள் நிராகரிக்கப்பட்டு, தகுதி வாய்ந்த ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 33 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 14ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதில், முதன்முறையாக பொறியியல் படிப்பில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் 7.5 விழுக்காடு முன்னுரிமை அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களில், விளையாட்டு வீரர்கள் 48 பேருக்கும், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் நான்கு பேருக்கும், மாற்றுத் திறனாளிகள் 20 பேருக்கும், அரசுப் பள்ளியில் முதல் 10 இடங்களை தரவரிசைப் பட்டியலில் பெற்ற மாணவர்களுக்கும் நேற்று (செப்.15) தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை உதவி மையங்களுக்கு நேரடியாக வரவழைக்கப்பட்டு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் வழங்கல்
முதன்முறையாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு தொழிற்கல்வியில் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பிஇ, பிடெக் பொறியியல் படிப்பில், இடங்களைத் தேர்வு செய்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்வதற்கான அனுமதி கடிதத்தை வரும் 20ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் வழங்குகிறார்.
மேலும், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு குறித்தும், அரசு பள்ளியில் படித்த மாணவர்களில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு தகுதியான மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு அட்டவணையையும் தமிழ்நாடு தொழில்நுட்பம் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
இந்தக் கலந்தாய்வில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களில் 7.5 விழுக்காடு முன்னுரிமை இட ஒதுக்கீட்டில், பொதுப்பிரிவில் 15 ஆயிரத்து 151 மாணவர்களும், தொழிற்கல்வி பாடப்பிரிவில் 499 மாணவர்களும் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.