இது குறித்து தன்னாட்சி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "2020ஆம் ஆண்டுமுதல் கரோனா பெருந்தொற்று காரணமாகப் பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 இன்கீழ் தமிழ்நாட்டில் பல கட்டங்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, தற்போது சில தளர்வுகளுடன் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டுவருவது நாம் அறிந்ததே.
இறுதியாக வெளியிடப்பட்ட அரசாணையின்படி (நிலை எண்: 504 நாள் ஆகஸ்ட் 7 - வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை) ஊரடங்கானது வரும் 23ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட அரசாணையானது, அதற்கு முன் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட ஊரடங்குத் தொடர்பான அரசாணைகள், நிலை எண் 491 (ஜூலை 31), அரசாணை நிலை எண் 466 (ஜூலை 17) ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ள ஊரடங்குத் தளர்வுகள் தொடர்ந்து நீடிக்கும் என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.
பேரிடர் மேலாண்மைச் சட்டம்
அதன்படி, அரசாணை நிலை எண் 466இல் (ஜூலை 17) குறிப்பிடப்பட்டுள்ளவாறு 'பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமுதாய, அரசியல் சார்ந்த கூட்டங்களுக்குத் தடை' என்பது தொடர்ந்து நீடிக்கும் என்பது தெளிவாகிறது.
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 3(2) மற்றும் பிரிவு 3(2-A)இன்படி கிராம சபைக் கூட்டங்கள் 6 மாத இடைவெளிக்குள் (ஆண்டுக்கு குறைந்தபட்சம் இரண்டு முறையாவது) ஊராட்சித் தலைவர்களால் கட்டாயம் கூட்டப்பட வேண்டும்.
அரசாணை நிலை எண் 245 ஊரக வளர்ச்சி (சி1) துறை நாள் 1998 நவம்பர் 19 இன்படி ஆண்டுக்கு நான்கு நாள்கள் (ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2) கிராமசபை கட்டாயம் கூட்டப்பட வேண்டும். ஆனால், 2020 ஜனவரி 26 குடியரசு நாள் கிராம சபைக்குப் பிறகு கடந்த 19 மாதங்களாகக் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறவில்லை.
அது, கிராம வளர்ச்சித் திட்டத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 இன்படி கிராமசபையைக் கூட்டுவதற்கான அதிகாரம் கிராம ஊராட்சித் தலைவருக்கு உள்ளது.
கிராம சபை - முன்பே தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்
அதனடிப்படையில் வருகின்ற 15ஆம் கிராமசபைக் கூட்டத்தை ஊராட்சித் தலைவர்கள் தாமாக முன்வந்து கூட்ட முன்வரும்போது மேற்குறிப்பிட்டுள்ள பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005, அது தொடர்பான அரசாணைகளின் அடிப்படையில் அதனை மாவட்ட ஆட்சியர்கள் தடைசெய்ய வாய்ப்புள்ளது.
2021 ஜனவரி 26 கிராம சபைக் கூட்டத்தைக் கூட்ட சில ஊராட்சித் தலைவர்கள் முயன்றபோதும் இந்த நிலை ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட ஒரு ஊராட்சித் தலைவர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி கிராமசபையைக் கூட்டுவதற்கான தனது அதிகாரத்தை நீதிமன்றம் உறுதிசெய்ய வேண்டும் என வழக்குத் (WP:7326/2021) தொடர்ந்துள்ளார் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் கிராமசபை தொடர்பான விதிகளின்படி கிராமசபைக் கூட்டம் நடத்துவதற்கு குறைந்தது ஏழு முழு நாள்களுக்கு முன்பாகவே கூட்ட அறிவிப்பினை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். அதன்படி இம்மாதம் 8ஆம் தேதி அன்றே ஆகஸ்ட் 15 கிராம சபைக்கான அறிவிப்புகள் மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
கிராம சபையை நடத்துக
ஆயினும் இதுவரை அரசிடமிருந்து ஊரடங்குத் தளர்வுகள் குறித்த அறிவிப்புகளில் கிராமசபை பற்றிய தகவல்கள் இல்லாததாலும் ஊராட்சித் தலைவர்கள் தாங்களாகக் கிராம சபைக் கூட்டத்தைக் கூட்டுவதினால் ஏற்படும் சவால்களைச் சந்திக்க வேண்டிய நிலை இருப்பதாலும் எந்த ஊராட்சியிலும் கிராம சபைக் கூட்ட அறிவிப்பு இதுவரை வெளியானதாகத் தெரியவில்லை.
விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊராட்சித் தேர்தல்களை நடத்த உரிய நடவடிக்கைகளை எடுத்துவரும் அரசு, தமிழ்நாட்டின் அனைத்து ஊரகப் பகுதிகளிலும், அந்தந்த கிராம ஊராட்சிப் பகுதிகளில் தகுந்த இடைவெளியுடனும், ஏழு நாள்கள் முன்னறிவிப்பு உள்ளிட்ட சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் கிராமசபைக் கூட்டங்களைக் கூட்டுவதற்குப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் உரிய தளர்வுகளை உடனடியாக அறிவிக்க வேண்டுகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கிராம சபைக் கூட்டத்தில் யாருக்கு அதிகாரம்? ... தீர்வு சொல்லும் நந்தகுமார்!