சென்னை: ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ”தமிழ்நாட்டில் கடந்த 2008ஆம் ஆண்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை கருணாநிதி தொடங்கி வைத்தார். அப்போது, ஹிதேந்திரன் என்ற இளைஞர் தான் முதன்முதலில் உறுப்புகளை தானம் செய்தார். உறுப்பு மாற்று சிகிச்சைக்கான ஆணையம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் முதன்முதலில் தொடங்கப்பட்டது.
கடந்த 2 ஆண்டு காலம் சற்று தொய்வு ஏற்பட்டது. உறுப்பு தான மாற்றத்தை தீவிரப்படுத்தவும். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. உறுப்புதானம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அரசு மருத்துவமனைகளிலும் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு குறித்த அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் மொத்தம் 36 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ள நிலையில் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் தான் உறுப்பை கொடையாக பெறும் உரிமம் இருக்கிறது. இந்த நிலையில் அனைத்து மருத்துவ கல்லூரி முதல்வர்களும் உடல் உறுப்பு தானம் கொடையாக பெறும் உரிமத்தை, அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதற்கு டிஎம்எஸ்-யிடம் கடிதம் எழுதி அனுப்ப வேண்டும் என்று தெரிவித்திருந்தோம். அதன்படி அனைவரும் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். அடுத்த வாரத்தில் அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து அவர்களின் உடல் உறுப்பைகொடையாக பெறும் உரிமை கிடைத்துவிடும்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் உறுப்புகளை தானம் பெறுவதற்கான முயற்சி இந்த மாதம் முதல் மேற்கொள்ளப்படவுள்ளது. உறுப்பு மாற்று சிகிச்சைகளில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் மகத்தான சாதனை. தமிழ்நாட்டில் 1,548 பேர் உடல் உறுப்பு தானம் செய்து இருக்கிறார்கள். அதன் மூலம் 5,642 பேர் பயன்பெற்று இருக்கிறார்கள்.