தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஈரோடு பேருந்து நிலைய கடைகளை இடிக்கும் முடிவை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு! - smart city scheme

சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை இடித்து விட்டு புதிதாக கட்டும் வகையில், கடைகளை காலி செய்யும்படி மாநகராட்சி அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

bus stand
bus stand

By

Published : Dec 25, 2020, 2:24 PM IST

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை இடித்து, புதிதாக வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து நிலையத்தை கட்ட ஈரோடு மாநகராட்சி திட்டமிட்டது. அதனடிப்படையில், தற்போது கடைகளின் உரிமம் பெற்றவர்களை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் காலி செய்யும்படி, செப்டம்பர் 17ஆம் தேதி மாநகராட்சி ஆணையர் நோட்டீஸ் அனுப்பினார். இதனை எதிர்த்து கடை உரிமம் பெற்றுள்ள தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட 34 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இவ்வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, 2025ஆம் ஆண்டு வரை கடைகளுக்கு உரிமம் பெற்றுள்ள நிலையில், காலி செய்ய சொல்வதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், தங்கள் கருத்துகளை கேட்காமல் கடைகளை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால், அதை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அரசு தரப்பில், கட்டடம் இடியும் நிலையில் இருந்ததாலேயே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், அதை இடித்துவிட்டு புதிதாக கட்ட முடிவு எடுத்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாநகராட்சி அனுப்பிய நோட்டீசில் விதிமீறல் ஏதுமில்லை எனக்கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், நீண்ட நாட்கள் வர்த்தகம் செய்து வருவதால் அந்த இடத்திற்கு உரிமை கோர முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, கடைகளை காலி செய்வதற்கான அவகாசத்தை, மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 11 நகரங்களில் ஈரோடும் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ள நீதிபதி, ஒவ்வொரு குடிமகனுக்கும் நாட்டின் உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் என்றும், அதை பூர்த்தி செய்யும் வகையில் அரசு எடுத்துள்ள கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ’உத்தரவுகளை மதிக்காத ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவியை பறிக்க வேண்டும்’ - நீதிபதி கருத்து!

ABOUT THE AUTHOR

...view details